256. அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் கோயில்
இறைவன் சந்திரமௌலீஸ்வரர், சந்திரசேகர்
இறைவி வடிவாம்பிகை
தீர்த்தம் சந்திர தீர்த்தம்
தல விருட்சம் வில்வம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருவக்கரை, தமிழ்நாடு
வழிகாட்டி திண்டிவனத்தில் இருந்து கூட்டேரிப்பட்டு, மைலம் வழியாக சுமார் 27 கி.மீ. தொலைவு. இச்சாலையில் உள்ள பெரும்பாக்கம் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். சுமார் 6 கி.மீ. தொலைவு. விழுப்புரத்தில் இருந்து திருக்கானூர் வழியாக சுமார் 35 கி.மீ. தொலைவு. கோயில் அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. பேருந்து வசதி குறைவு.
தலச்சிறப்பு

வக்கிராசுரன் என்னும் அசுரனை திருமால் வதம் செய்தபோது, அவனது இரத்தம் பூமியில் சிந்தாமல் காளி தனது நாவை நீட்டி உறிஞ்சிக் கொண்டாள். வக்கிராசுரன் இத்தலத்து சிவபெருமானை வழிபட்டதால் 'திருவக்கரை' என்று வழங்கப்படுகிறது. இத்தல மூலவரை சந்திரன் வழிபட்டதால் 'சந்திரமௌலீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் 'சந்திரமௌலீஸ்வரர்', 'சந்திரசேகரர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன், மூன்று முகங்களுடன் லிங்க வடிவில் அருள்பாலிக்கின்றார். சந்திரனுக்காக ஒரு முகமும், மகாவிஷ்ணுவிற்காக ஒரு முகமும், பிரம்மாவிற்காக ஒரு முகமும் கொண்டுள்ளதாக தல வரலாறு கூறுகிறது. அம்பாள் 'வடிவாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், வரதராஜப் பெருமாள், சனி பகவான், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பல சன்னதிகள் உள்ளன.

கோயிலின் பிரகாரத்தில் புகழ்பெற்ற வக்கிர காளி சன்னதி உள்ளது. பெரிய திருவுருவம். மகாவிஷ்ணு அசுரனை கொன்ற பிறகு, அவனது தங்கையான அரக்கியை காளி கொன்றாள். அப்போது அவள் கர்ப்பமாக இருந்ததால் அவள் வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்து தமது காதில் குண்டலமாக அணிந்து காத்தாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தப்படுத்த ஸ்ரீசக்ர யந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.

திருமால், பிரம்மா, சந்திரன், காளி, ஆதிசங்கரர், வக்கிராசுரன், குண்டல முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com